ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலத்த கண்டனத்தை தெரிவித்து உள்ளன. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்பது உட்பட 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. பாகிஸ்தான் விமானங்கள் நம் வான் எல்லைக்குள் பறக்க தடை விதித்தது.
இதையும் படிங்க: எல்லை தாண்டி சென்ற இந்திய வீரர்.. மீட்பதில் தொடரும் சிக்கல். அடம் பிடிக்கும் பாகிஸ்தான்..!

பாகிஸ்தானில் உள்ள 16 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் சிந்து நதி படுகையை நம்பியே இருக்கும் நிலையில், அங்கு விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா உடனடியாக நிறுத்தினால், பாகிஸ்தானில் அதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தானில் கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சிந்து நதிநீர் பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தானின் 24 கோடி மக்களுக்கு அது உயிர்நாடி. சிந்து நதிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த எத்தகைய விலையையும் பாகிஸ்தான் கொடுக்கும். இந்த நிலையில் இந்திய அரசு தான் எடுத்த முடிவில் விடாப்பிடியாக உள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போர் அறிவிப்பிற்கு சமம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இறங்கும் அனைத்து வகையான பொருட்களின் இறக்குமதிக்கும் இப்போது இந்தியா அதிரடியாக தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நம் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது எந்த வகையிலும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இனி எந்த பொருட்களும் வர முடியாது. இதற்கான தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து விட்டது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் கொள்கை நலன் கருதி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்று வர்த்தக அமைச்சகம் கூறியது. ஏற்கனவே பாகிஸ்தான், இந்தியா இடையேயான வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியா போட்ட தடை உத்தரவால் பாகிஸ்தானுக்கு இன்னும் பலத்த அடி விழுந்துள்ளது. ஏற்கனவே அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அப்படி இருக்கும் போது, தன்னிடம் உள்ள சிமென்ட், ஜவுளி மற்றும் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மேலும் பாகிஸ்தான் இழப்பை சந்திக்கும் நிலை இப்போது உருவாகி உள்ளது.
இதையும் படிங்க: போர் ஒத்திகை பார்க்கும் இந்தியா.. தயாராகும் விமானப்படை.. பதற்றத்தில் பாகிஸ்தான்..!