மகாராஷ்டிர மாநிலத் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார், இன்று காலை பாராமதியில் நிகழ்ந்த கோர விமான விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத் துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் இன்று காலை பாராமதி விமான நிலையத்தில் நிகழ்ந்தத் துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அஜித் பவார் அவர்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்; மகாராஷ்டிர மக்களின் நலனுக்காகவும், ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றியப் பணிகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு மகாராஷ்டிர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கே ஈடு செய்ய முடியாதப் பேரிழப்பாகும். இந்தத் துயரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலை மும்பையிலிருந்து பாராமதிக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சிறிய ரக விமானத்தில் அஜித் பவார் சென்றார். பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் நிலைதடுமாறி ஓடுதளத்தின் ஓரத்தில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகள் என ஐந்து பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நொடி பொழுதில் உயிர் தப்பிய பயணிகள் - பூந்தமல்லி அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
தமிழக முதலமைச்சரைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்களும் அஜித் பவாரின் மறைவுக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர்: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்..!! பறிபோன ராணுவ வீரர்களின் உயிர்..!!