2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் உலக நாடுகளை ஒரு காட்டு காட்டியது கொரோனா தொற்று. லட்சக்கணக்கான உயிரிழப்புகள், தீவிர சிகிச்சைகள் ஒருபக்கம் இருக்க, மறுபுறம் உலகமே முடங்கி பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பாதிப்புகள் இப்போதுவரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்பாடா ஒருவழியாக கொரோனா தொற்று பரவல் ஓய்ந்தது என மக்கள் நிம்மதியடைந்திருந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆங்காங்கே மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஆங்காங்கே கொரோனா பாதிப்பு பதிவாக தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகம், கேரளாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம்.. தேசிய சராசரியை விட இருமடங்கு குறைந்தது..!

கேரள மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓமிக்ரான் JN1 வகைகள், LF7 மற்றும் NB1.8, தென்கிழக்கு நாடுகளில் பரவுகின்றன. அவை அதிக வீரியம் கொண்டவை. எனவே சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும் என்று கூறினார். மேலும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தீவிர நோய் உள்ளவர்கள் பொது இடங்களிலும், பயணம் செய்யும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தேவையில்லாமல் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டு என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநில அளவிலான ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) ஆலோசனை செய்து மாநிலத்தின் பொதுவான நிலைமையை மதிப்பீடு செய்தது. அதில் மே மாதத்தில் மட்டும், கேரள மாநிலத்தில் 182 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. கோட்டயம் மாவட்டத்தில் 57 பேர், எர்ணாகுளத்தில் 34 பேர், திருவனந்தபுரத்தில் 30 பேர் என மொத்தம் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மாநிலத்தில் அறிகுறிகள் உள்ளவர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஆர்டிபிசிஆர் கருவிகள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!