ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் விரைவில் இந்தியா திரும்புவார் என அமெரிக்க மதபோதகர் டாக்டர் கே.ஏ. பால் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.
ஆனால், இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகமும், நிமிஷாவின் குடும்பமும் மறுத்திருக்கு. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. மத்திய அரசு, இது ஒரு உணர்ச்சிகரமான வழக்குனு சொல்லி, நிமிஷாவுக்கு எல்லா உதவிகளையும் செய்யுறதாக உறுதி அளிச்சிருக்கு.
நிமிஷா பிரியா, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியர். 2008-ல் வேலைக்காக ஏமனுக்கு சென்றவர், 2014-ல் தனியாக மருத்துவமனை தொடங்க முயற்சி செய்தார். ஏமன் சட்டப்படி உள்ளூர் பங்குதாரர் தேவைப்பட்டதால், தலால் அப்தோ மஹதி என்பவரோடு இணைந்து வேலை செய்தார். ஆனா, 2017-ல் தலால் மஹதியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஏமன் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிச்சது.
இதையும் படிங்க: மரணத்தை தவிர்க்க எல்லாமே பண்ணுறோம்! உயிரை கையில் பிடித்தபடி தவிக்கும் நிமிஷா பிரியா!!
நிமிஷா, தன்னை தற்காப்புக்காகவே இந்த செயலை செய்ததாகவும், தலால் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியிருக்கார். 2023 நவம்பரில், ஏமன் உச்ச நீதிமன்றம் நிமிஷாவின் மேல்முறையீட்டை நிராகரிச்சது.

ஜூலை 16, 2025-ல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்னு அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனா இந்திய அரசின் முயற்சியால் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஜூலை 22, 2025-ல், அமெரிக்காவைச் சேர்ந்த மதபோதகரும், குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் நிறுவனருமான டாக்டர் கே.ஏ. பால், "நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியாவுக்கு திரும்புவார்"னு ஒரு வீடியோவில் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமா பரவியது.
ஆனா, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. "எங்களுக்கு இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை"னு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருக்கார். நிமிஷாவின் கணவர் டோமி தாமஸும், "எங்களுக்கு இப்படி எந்த தகவலும் வரவில்லை"னு தெரிவிச்சிருக்கார்.
ஏமன் சட்டப்படி, "ரத்தப் பணம்" (Diyah) கொடுத்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மன்னிப்பு அளிச்சா தண்டனையை ரத்து செய்ய முடியும். இதற்காக, நிமிஷாவின் குடும்பமும், ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’னு ஒரு அமைப்பும் சுமார் 58,000 அமெரிக்க டாலர்கள் (48 லட்சம் ரூபாய்) திரட்டியிருக்கு.

ஆனா, தலாலின் குடும்பம் இந்த பணத்தை ஏற்க மறுத்து, "நீதி வேணும்"னு வற்புறுத்துது. இந்திய அரசு, ஏமன் அதிகாரிகளோடும், சவுதி அரேபியா, ஈரான் போன்ற நட்பு நாடுகளோடும் பேச்சு நடத்தி, நிமிஷாவின் விடுதலைக்கு முயற்சி செய்யுது.
நிமிஷாவின் அம்மா பிரேமகுமாரி, ஒரு வருடமாக ஏமனில் முகாமிட்டு, தலாலின் குடும்பத்தை சந்திக்க முயற்சி செய்யுறார். கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவர் ஷேக் அபூபக்கர் அகமதும், ஏமன் மதத் தலைவர்களோடு பேசி, தண்டனையை தள்ளி வைக்க உதவியிருக்கார். இந்திய உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 14-ல் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டிருக்கு.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போர், இந்தியாவுக்கு அங்கு தூதரகம் இல்லாதது ஆகியவை இந்த விவகாரத்தை சிக்கலாக்குது. இந்திய அரசு, "நாங்க இந்த வழக்கை உன்னிப்பா கவனிச்சு, எல்லா உதவிகளையும் செய்யுறோம்"னு சொல்லியிருக்கு. ஆனாலும், நிமிஷாவின் விடுதலைக்கு இன்னும் நிறைய இராஜதந்திர முயற்சிகள் தேவைப்படுதுனு தெரியுது.
இதையும் படிங்க: நிமிஷா வழக்குல எதுவும் பண்ண முடியல!! கைவிரித்த மத்திய அரசு!! கலக்கத்தில் கேரளா நர்ஸ் குடும்பம்!