தலைநகர் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான சர்ச்சைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு முன்னதாக நகரின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால், அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எஸ்ஐஆர் தொடர்பான சில முடிவுகளில் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, தேசிய அளவில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இன்று நடைபெற்ற கூட்டத்தில், எஸ்ஐஆர் நடைமுறை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா தலைமையில்.. டெல்லியில் தொடங்கியது 18-வது பிரிக்ஸ் மாநாடு..!!
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஞானேஷ் குமாருக்கு எதிரான தீர்மானம் தொடர்பான வரைவு அறிவிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, டெல்லியில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஒன்றில் ராகுல் காந்தி பேக்குடன் நடப்பது போன்ற படத்துடன், தேர்தல் பிரசார நேரத்தில் வெளிநாட்டில் இருந்ததாகவும், பீகார் தேர்தலில் 59 நாட்கள் காணாமல் போனதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பதாகையில் ரமேஷ் சென்னிதலாவின் படத்துடன், வெற்றி பெறும்போது அமைதியாகவும் தோல்வியில் தேர்தல் ஆணையத்தை குறைசொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://x.com/zingabad/status/2105185877345403183/video/1
கேரள தேர்தல் வெற்றியையும் மகாராஷ்டிர தோல்வியையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி படங்களுடன் “HYPOCRISY AT ITS PEAK” என்ற வாசகம் இடம்பெற்றுள்ள பதாகையில், வெற்றியில் அமைதியாகவும் தோல்வியில் தலைமைத் தேர்தல் ஆணையரை கைது செய்ய வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள சிவப்புப் பதாகையில், அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரின் படங்களுடன் “இந்தியா கூட்டணியின் இரட்டை நிலைப்பாடு” என விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகைப் போர் ஒருபுறம் தீவிரமடைந்திருக்க, இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டு நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்ஐஆர் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனை, எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட போராட்டத் திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பது அரசியல் வட்டாரங்களின் கணிப்பு.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழி திருக்குறள் பரிசு: எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி!