லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று முன் அறிவிப்பு எதுவும் இன்றி டில்லி பல்கலை. வளாகம் சென்றார். அங்கு அவர் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தல வர் அலுவலகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக புதிய கல்வி கொள்கை, ஜனநாயக பங்கேற்பு மற்றும் உள்ளடக்கிய கல்வி இடங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். ராகுல்காந்தியின் இந்த திடீர் வருகையை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டித்திருக்கிறது.

இது குறித்து அது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ராகுல்காந்தியின் திடீர் வருகை பல்கலைக்கழக நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது. மாணவர்கள் நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருந்தது. எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாமல் ராகுல் காந்தி பல்கலைக்கழகத்திற்கு திடீரென 2-வது முறையாக வந்துள்ளார். அவர் ஒரு மணி நேரம் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அந்த நேரம் முழுவதும் அந்த பகுதி பாதுகாப்பு பணியாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டது. யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: கேமராவை பார்த்தால் மட்டும் ரத்தம் கொதிக்குதா? பிரதமரை கேலி செய்த ராகுல்காந்தி.. இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு அலை..!

துறை செயலாளர் தனது அலுவலகத்திற்கு செல்லவும் முடியவில்லை. அவரை இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள் அறைக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகம் இதுபோன்ற செயலை கண்டிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம். இதில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி டில்லி பல்கலைக்கழக வளாகத்துக்குள் முன் அறிவிப்பின்றி சென்றதற்கு பாரதிய ஜனதா கட்சியின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டில்லி பல்கலைக்கழகத்தை திடீரென சர்கஸ் கூடாரமாக ராகுல் காந்தி மாற்றிவிட்டார். பல்கலைக்கழகம் குழப்பத்துக்கு உள்ளானது. பஹல்காம் தாக்குதல் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்புவதன் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்தும் மாணவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

நமது ராணுவ வீரர்களின் பின்னால் முழு தேசமும் ஒன்றுபட்டு இருக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாடு அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற விளையாட்டுகளை அது ஒரு போதும் மறக்காது என அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாக்., ராணுவ அதிகாரி மனைவியுடன் பேஸ்புக்கில் தொடர்பு.. உ.பி-யில் கைது செய்யப்பட்ட உளவாளியின் பகீர் பின்னணி..!