திமுக வரலாற்றிலேயே எதிர்பாராத வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளரும் படுதோல்வியைத் தழுவியுள்ளனர். இது 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி திமுக 2.O ஆட்சியை அமைப்போம் என நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு பேரிடியாக அமைந்தது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கள ஆய்வு செய்வதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 38 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்வர். மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களைச் சந்தித்துக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்று அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது.
அந்த குழுவினருக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சில நிபந்தனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். அதில்,
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
இதையும் படிங்க: ஸ்டாலின் அதிரடி Move... திமுகவில் மீள் கட்டமைப்பு..! தோல்வியை ஆராயும் குழுவுடன் தீவிர ஆலோசனை..!
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் மீது அடுத்தடுத்து பாரம்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!