கர்நாடக மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போலி வாக்காளர்கள் பட்டியல் மூலம் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார்.

மேலும் கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு போலி வாக்காளர்கள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டது முக்கிய காரணம் எனக் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாஜக தரப்பில், இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அன்று பெங்களூரில் இந்த முறைகேடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.
இதையும் படிங்க: பாஜவுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு? 100% ஆதாரம் இருக்கு!! யாரும் தப்ப முடியாது!!
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; கர்நாடகாவில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஒரு வலிமையான ஆதாரத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி 6 மாத கால கடினமான முயற்சியின் மூலம் சேகரித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. மகாதேவபுரா தொகுதியில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பது குறித்த தரவுகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நிறைய இருக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதெல்லாம் பார்லி.,-ல பேச முடியாது! தர்மேந்திர பிரதான் கறார்.. எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு..!