நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் ஏறும் விலை நிலவரம் பண்ணையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தாலும், நுகர்வோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 காசுகள் உயர்ந்த முட்டை விலை, இன்று மேலும் 10 காசுகள் அதிகரித்து ஒரு முட்டை ரூ.6.20-க்கு விற்பனையாகிறது.
இந்த திடீர் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். “டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை கணிசமாக அதிகரித்துள்ளது. முட்டைகளை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து செலவு நேரடியாக விலையை பாதிக்கிறது” என்று அவர் விளக்கினார். மேலும், கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட முக்கிய தீவனப் பொருட்களின் விலை ஏற்றம் பண்ணை நடத்தும் செலவை அதிகரித்துள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர பண்ணையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். கேரளா மாநிலத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், அங்கு முட்டைக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பதால் உள்ளூர் சந்தையிலும் விலை நிர்ணயம் பாதிக்கப்படுகிறது. இந்த சூழலில் விரைவில் ஒரு முட்டையின் விலை ரூ.7-ஐ தொடும் என சிங்கராஜ் எச்சரித்தார்.
இதையும் படிங்க: குழந்தைகள் மீதான அத்துமீறல்... நாமக்கல்லில் வெடித்த போராட்டம்..!! ஆட்சியர் விளக்கம்..!!
தொழிலாளர்கள் பற்றாக்குறையும் பண்ணையாளர்களுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கோழி பண்ணைகளில் தினசரி பராமரிப்பு, முட்டை சேகரிப்பு, சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காத நிலை நிலவுகிறது. இதனைச் சமாளிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (100 நாள் திட்டம்) பயனாளர்களை கோழிப்பண்ணை பணிகளில் ஈடுபடுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதி. இங்கு ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. விலை உயர்வு நுகர்வோரின் அன்றாட செலவை அதிகரிக்கும் நிலையில், அரசு தலையிட்டு தீவன விலை கட்டுப்பாடு, போக்குவரத்து உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!