நியூடெல்லி, ஜனவரி 6: லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையிலான பதற்றம் குறைந்துள்ள போதிலும், சீனா தனது ராணுவ படைகளை கடந்த ஒரு ஆண்டில் பாதியாக குறைத்துள்ள நிலையில், உட்கட்டமைப்பு வசதிகளை இந்தியாவை விட நான்கு மடங்கு வேகத்தில் உருவாக்கி வருவதாக பிரிட்டனின் 'தி எகானமிஸ்ட்' இதழ் அறிக்கை தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் நிரந்தர கட்டமைப்புகள் 10 மடங்கு அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் எல்லையில் பெருமளவு படைகளை நிறுத்தின. 2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்தித்து பேசிய பிறகு, டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் படை விலக்கல் ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனால் எல்லையில் ரோந்து பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சீனா தனது முன்னணி படைகளை பாதியாக குறைத்துள்ளது.
ஆனால், சீனா சாலைகள், பாலங்கள், கிராமங்கள், ராணுவ வசதிகள் ஆகியவற்றை துரிதமாக கட்டி வருகிறது. பாங்காங் ஏரியின் குறுக்கே 2024ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முடிக்கப்பட்ட பாலம், சீன படைகளை விரைவாக நகர்த்த உதவுகிறது.
இதையும் படிங்க: கைகுலுக்கிக் கொண்டே காலை வாரும் சீனா!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!? எல்லையில் நடக்கும் தந்திரம்!!
சீனாவின் சாலைகள் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. பொதுமக்களை எல்லைக்கு அருகில் குடியமர்த்தி, வீடுகள், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகளுடன் கூடிய கிராமங்களை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சீனா எல்லையில் முழு படை பலத்தை நிறுத்த தேவையில்லை. வலுவான தகவல் தொடர்பு வசதிகள் காரணமாக, இரண்டு நாட்களுக்குள் படைகளை திரட்ட முடியும் என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து எல்லையில் பணியாற்றும் இந்திய பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: “இரு நாடுகளுக்கு இடையேயான ஹாட்லைன் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் நிமிடங்களுக்கு பதில் மணி நேரங்கள் நீடிக்கின்றன.
ஆனால் சீனா தனது படைகளை எல்லையில் குறைக்கவில்லை. நாமும் அதற்கேற்ப படைகளை நிறுத்தியுள்ளோம். இது தளவாட ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் முக்கியம். முன்பைவிட உறவு சீராக உள்ளது” என்றார்.
செயற்கைக்கோள் படங்களில் சீனாவின் நிரந்தர கட்டமைப்புகள் 10 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்தியா எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள நியோமாவில் புதிய விமானப்படை தளத்தை சமீபத்தில் திறந்துள்ளது.
சீனாவின் தட்டையான நிலப்பகுதி படைகளை விரைவாக நகர்த்த உதவுகிறது. ஆனால் இந்தியாவின் மலைப்பாங்கான பகுதியில் தாழ்வான இடத்தில் இருந்து மேலே நகர்த்த வேண்டிய சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டே இந்தியா தனது உட்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.
இரு நாடுகளும் ஹாட்லைன் மூலம் தொடர்பில் உள்ளன. பதற்றம் குறைந்துள்ள போதிலும், சீனாவின் உட்கட்டமைப்பு வளர்ச்சி எதிர்காலத்தில் சவாலாக அமையலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: கைகுலுக்கிக் கொண்டே காலை வாரும் சீனா!! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து!? எல்லையில் நடக்கும் தந்திரம்!!