நியூடெல்லி, ஜனவரி 6: லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே கடந்த ஒரு ஆண்டில் பதற்றம் குறைந்துள்ள போதிலும், சீனா தனது ராணுவ படைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ள நிலையில், உட்கட்டமைப்பு கட்டுமானங்களை இந்தியாவை விட நான்கு மடங்கு வேகத்தில் மேற்கொண்டு வருவதாக பிரிட்டனின் 'தி எகானமிஸ்ட்' இதழ் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
2020ஆம் ஆண்டு மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ரஷ்யாவின் காசன் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் படைகளை பரஸ்பரம் விலக்கிக் கொள்ளும் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதையும் படிங்க: இசையைப் போலவே நீங்களும்... ஏ.ஆர். ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்...!
இதன்படி, சீனா தனது எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்ட படைகளின் எண்ணிக்கையை கடந்த ஒரு ஆண்டில் பாதியாக குறைத்துள்ளது. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ரோந்து பணிகள் தொடர்கின்றன. 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது இந்தியா சீன எல்லையில் இருந்து இரு படைப்பிரிவுகளை பாகிஸ்தான் எல்லைக்கு திருப்பியது போன்ற நடவடிக்கைகள், சீனா மீது இந்தியாவுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகின்றன.

ஆனால், படைகளை குறைத்தாலும் சீனா எல்லைப் பகுதியில் சாலைகள், பாலங்கள், கிராமங்கள், ராணுவ வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை துரிதமாக கட்டி வருகிறது. இந்திய அதிகாரிகள் மதிப்பீட்டின்படி, சீனா இந்தியாவை விட குறைந்தது நான்கு மடங்கு வேகத்தில் இவற்றை உருவாக்கி வருகிறது. பாங்காங் ஏரியின் குறுக்கே 2024ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம், சீன படைகளை விரைவாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்த உதவுகிறது. சீனாவின் சாலைகள் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளன.
மேலும், சீன அதிகாரிகள் பொதுமக்களை எல்லைக்கு அருகில் குடியமர்த்தி, வீடுகள், மின்சாரம், தகவல் தொடர்பு வசதிகளுடன் கூடிய கிராமங்களை நிறுவியுள்ளனர். இதன் மூலம் சீனா தனது முழு படை பலத்தையும் எல்லையில் நிறுத்த தேவையில்லாமல், தகவல் தொடர்பு வசதிகளை வலுப்படுத்தி இரண்டு நாட்களுக்குள் படைகளை திரட்டும் திறனை பெற்றுள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்களில் 2020க்கு பிறகு சீனாவின் நிரந்தர கட்டமைப்புகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியா தரப்பில் எல்லை உட்கட்டமைப்புகளை விரைவுபடுத்தி வருகிறது. ஆனால் சீனாவின் வேகம் இந்தியாவுக்கு சவாலாக உள்ளது. இந்நிலையில் எல்லைப் பகுதியில் அமைதி நிலவினாலும், சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை...!