இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கின்னார், குல்லு, மற்றும் சிம்லா மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குல்லு மாவட்டத்தில் தற்காலிக நீர்த்தேக்கம் உடைந்ததால், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன, மேலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கின்னார் மாவட்டத்தின் ரிப்பா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, பேருந்து ஒன்று நூலிழையில் தப்பியது. சாலைகளில் 383 இடங்களில் போக்குவரத்து தடைபட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 493 சாலைகள், 1,120 மின்மாற்றிகள் மற்றும் 245 நீர் விநியோக திட்டங்கள் பாதிப்படைந்து உள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 10 மாத பெண் குழந்தை! மாநிலத்தின் மகளாக அறிவிப்பு.. இமாச்சல் அரசு அதிரடி..!
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு 199 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்புகள் கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்டு 6 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்டவையாகும். வானிலை தொடர்பான உயிரிழப்புகளில் 17 பேர் மேகவெடிப்பாலும், 20 பேர் நீரில் மூழ்கியும், ஒருவர் மின்சாரம் தாக்கியும், 9 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கியும், 6 பேர் நிலச்சரிவிலும் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் கீழே விழுந்தும், நெருப்பு, மின்னல் தாக்கியும் மற்றும் பிற மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, 91 பேர் சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என எச்சரித்துள்ளது. இயற்கையின் பேரழகிற்கு பெயர் பெற்ற இமாச்சல பிரதேசம், தற்போது பேரழிவின் கோர முகத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பேரிடர் மாநிலத்தின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அவசியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
இதையும் படிங்க: மேக வெடிப்பால் உருக்குலைந்த உத்தரகாசி.. 2வது நாளாக மீட்பு பணி தீவிரம்..!!