உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி மற்றும் சுகி மலைப்பகுதிகளில் நேற்று ஏற்பட்ட மேகவெடிப்பு (Cloudburst) காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கனமழையால் தூண்டப்பட்ட இந்த நிலச்சரிவு, தரலி கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளை சேற்றுக்குள் புதைத்தது. புவி வெப்பமயமாதல் காரணமாக பெருமழை மற்றும் நிலச்சரிவு அபாயங்கள் அதிகரித்துள்ளதாகவும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: உத்தரகாண்டை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 4 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்..!!
இந்நிலையில் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவை அடுத்து, இரண்டாவது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த இயற்கை பேரிடரால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், 15 வணிக நிறுவனங்கள் மற்றும் ஒரு பள்ளி முற்றிலும் அழிந்தன. இதுவரை சுமார் 600 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகளில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறை ஆகியவை ஈடுபட்டுள்ளன. ஹர்சில் பகுதியில் இருந்து 125 ராணுவ வீரர்கள் தரலி பகுதிக்கு விரைந்து, இதுவரை 20-25 பேரை மீட்டுள்ளனர். இருப்பினும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் தாமி அறிவித்துள்ளார். காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மோசமான வானிலை மற்றும் பலவீனமான தொலைத்தொடர்பு வசதிகள் மீட்பு பணிகளுக்கு சவாலாக உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, மாநில அரசு முழு உதவி வழங்கி வருகிறது.
இயற்கை பேரிடர்களை தடுப்பதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என அறிவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த துயர சம்பவம், மலைப்பகுதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு..! 17 உயிர்கள் பறிபோன சோகம்.. மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..!