பீகார் மாநிலத்தின் சிவான் தொகுதியில் 124 வயது வாக்காளராக மின்டா தேவி பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் முறைகேட்டைக் கண்டித்து, இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த (SIR) வாக்காளர் பட்டியலில் மின்டா தேவியின் பெயர் முதல் முறை வாக்காளராக இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, பாராளுமன்றத்தில் “124 Not Out Minta Devi” என்ற வாசகம் பொறித்த மின்டா தேவியின் உருவம் கொண்ட வெள்ளை நிற டி-ஷர்ட்களை அணிந்து, தேர்தல் ஆணையத்தின் மீதான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: "TEA WITH DEAD VOTERS".. தேர்தல் ஆணையத்தை கிண்டலடித்த ராகுல் காந்தி..!!
வாக்காளர் பட்டியலில் ஒரே நபர் பல முறை பதிவு, ஒரே முகவரியில் ஏராளமான வாக்காளர்கள், முகவரி இல்லாத அடையாள அட்டைகள், மைக்ரோசைஸ் புகைப்படங்கள் உள்ளிட்ட முறைகேடுகளை ராகுல் காந்தி தனது முந்தைய விளக்கக்காட்சியில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு, 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். இருப்பினும், அனுமதியின்றி பேரணி நடத்தியதாகக் கூறி, டெல்லி காவல்துறை தடுப்பு வேலிகள் மூலம் பேரணியைத் தடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரை கைது செய்து பின்னர் விடுவித்தது.
தேர்தல் ஆணையம், இந்த முறைகேடு திருத்தப்பட்டதாகவும், மேலும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் தங்கள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினர். இந்தப் போராட்டம், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து நாடு முழுவதும் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மின்டா தேவி, தனது பெயரை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகவும், “பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி யார் எனக்கு? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என் பெயரை ஏன் பயன்படுத்துகிறார்கள்?” எனக் கோபமாக கேள்வி எழுப்பினார். மேலும் எனது புகைப்படத்தை டி-ஷர்டில் பயன்படுத்தும் உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது? என்று கேட்ட அவர், எனக்கு இதெல்லாம் தேவையில்லை. என் வாக்காளர் அட்டையில் பிறந்த வருடம் 1900 என்று இருக்கிறது, அது மாற்றப்பட வேண்டும். இல்லையெனில் 124 வயதாவதாக கருதி அரசு எனக்கு முதியோர் பென்ஷன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
மின்டா தேவியின் வயது உண்மையில் 124 இல்லை என்று உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் இது தவறான பதிவு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம், தேர்தல் ஆணையத்தின் தரவு பதிவு முறையை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. எதிர்க்கட்சிகளின் போராட்டமும், மின்டா தேவியின் ஆவேசமான பதிலும், இந்தியாவின் தேர்தல் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன.
இதையும் படிங்க: திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் பரபரப்பு... இருதரப்பினர் இடையே கடும் மோதல்...!