கர்நாடகா மற்றும் ஆந்திரா இடையே தொழில் முதலீடுகளுக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசல், சாலை குழிகள் போன்ற பிரச்சினைகளை விமர்சித்து, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை IT நிறுவனங்கள் தேர்வு செய்ய அழைத்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷின் கருத்தை கர்நாடகா கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில், கூகுள் நிறுவனம், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 1.25 லட்சம் கோடி ரூபாய் ($15 பில்லியன்) முதலீட்டுடன் AI ஹப் மற்றும் டேட்டா சென்டர் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது இரு மாநிலங்களுக்கும் இடையே 'காரமான' விவாதத்தை தூண்டியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசல், சாலை பராமரிப்பின்மை குறித்து விமர்சங்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில், பெங்களூரு போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் யபாஜி, "பெங்களூரின் போக்குவரத்து மோசமானது; விரைவில் வெளியேறுவேன்" என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: அமைதிக்கு திரும்பும் சத்தீஸ்கர்!! ஒரேநாளில் நக்சலைட்டுகள் 208 பேர் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு!
IT நிறுவனங்கள், பொதுமக்கள் சாலைகளின் குண்டு-குழி நிலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதைப் பயன்படுத்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன், IT அமைச்சர் நாரா லோகேஷ், "பெங்களூரு நிறுவனங்கள் விசாகப்பட்டினத்துக்கு வாரலாம்" என வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். ஆந்திராவை "முதலீட்டுக்கு சிறந்த இடம்" என விளம்பரப்படுத்தினார்.
இது கர்நாடகாவை எரிச்சலடையச் செய்தது. துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "பெங்களூரின் தொழில்நுட்பம், திறமை, புதுமையை யாராலும் மறுக்க முடியாது" என பதிலடி கொடுத்தார். அமைச்சர் பிரியங்க் கார்கே, "ஆந்திராவின் பலவீனமான பொருளாதாரத்தை மறைக்கும் முயற்சி இது" என விமர்சித்தார். இரு மாநில தலைவர்களிடையே காரசார விவாதம் தொடங்கியது.

இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் விசாகப்பட்டினத்தில் 1.25 லட்சம் கோடி ரூபாய் ($15 பில்லியன்) முதலீட்டுடன், 1 கிலோவாட் டேட்டா சென்டர், AI ஹப் அமைக்கப்படும் என அக்டோபர் 14-ஆம் தேதி, கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது கூகுளின் இந்தியாவில் நடக்கும் பெரிய முதலீடு. கூகுள் கிளவுட் சேவைகள், தரவு சேமிப்பு, AI ஆராய்ச்சி விரிவடையும். முதற்கட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்; மொத்தம் 1.8 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
MoU-வில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஐ.டி. அமைச்சர் நாரா லோகேஷ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அசுவினி வைஷ்ணவ், கூகுள் கிளவுட் CEO தாமஸ் குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் 'சிலிக்கான் வேலி' பெங்களூரைத் தாண்டி விசாகப்பட்டினத்தைத் தேர்வு செய்த கூகுள், துறைமுக நகரம் என்பதால் கடல் அடி கேபிள் இணைப்புகள் எளிது என கூறுகிறது. ஆந்திராவின் வரி சலுகைகள் (22,000 கோடி ரூபாய், நிலம்-தண்ணீர் 25% தள்ளுபடி, இலவச மின்சாரம், GST திரும்பப் பணம்) இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
கூகுள் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த நாரா லோகேஷ், "ஆந்திர உணவு மட்டும் காரமில்லை. நாம் பெற்ற முதலீடுகளும் அத்தகையது தான். அண்டை மாநிலத்தவர்கள் சிலர் அதன் எரிச்சலை உணருகின்றனர்" என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது கர்நாடகாவை மீண்டும் சீண்டியது. அமைச்சர் பிரியங்க் கார்கே, "இத்தகைய தள்ளுபடிகள் பொருளாதார பேரழிவு. ஆந்திரா இதை சமாளிக்க முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.
பெங்களூரின் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் (நெரிசல், சாலைகள்) IT நிறுவனங்களை வேறு இடங்களுக்கு இடம்பெயரச் செய்கிறது. ஆந்திரா, விசாகப்பட்டினத்தை 'டெக் ஹப்' ஆக்கி முதலீட்டை ஈர்க்கிறது. கூகுள் முதலீடு, 180,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கி, விசாகப்பட்டிணத்தை உலகளாவிய இணைப்பு மையமாக்கி உள்ளது.
இதையும் படிங்க: சாதியப் பெயர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்பு... உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு...!