ஆப்ஸ் அடிப்படையில் வாடகைக் கார்களை இயக்கும் ஓலா, ஊபர் போன்று மத்திய அரசும் ஆப்ஸ் (செயலி) அடிப்படையில் வாடகைக் கார் சேவையை தொடங்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது:
செயலி அடிப்படையில் வாடகைக் கார் சேவையை இயக்கும் ஓலா, ஊபர் போன்று மத்திய அரசும், ஆப்ஸ் அடிப்படையில் “சஹர்” (ஒத்துழைப்பு) என்ற வாடகை கார் சேவையை தொடங்கஇருக்கிறது. சஹர் டாக்ஸி தளத்தின் மூலம் ஓட்டுநர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும்.
இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ அப்படித்தான் எங்களுக்கும்.. கனிமொழியை அதிர வைத்த அமித் ஷா..!
சஹர் டாக்ஸி சேவை என்பது கூட்டுறவு அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதில் ஓட்டுநர்கள் சேவை வழங்குவோர்கள் மட்டுமல்லாது பங்குதாரர்களாகவும் இருப்பார்கள். இது வெறும் கோஷமல்ல, இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த 3 ஆண்டுகளாக மத்திய கூட்டுறவு அமைச்சகம் கடுமையாக உழைத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் கூட்டுறவு டாக்ஸி சேவை தொடங்கப்படும். ஓட்டுநர்களுக்கு நேரடியாக லாபம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

ஓலா மற்றும் ஊபர் மீது அதிகரித்து வரும் கட்டணம் தொடர்பான பாரபட்சமான கொள்கைகள் நுகர்வோர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஒரு நுகர்வோர் எந்த மொபைல் போன்வழியாக டாக்ஸி சேவையை முன்பதிவு செய்கிறார் என்பதைப் பொருத்து கட்டணம் மாறியது. உதாரணமாக ஐபோன் மூலம் முன்பதிவு செய்தால் அதிக கட்டணமும், ஆண்ட்ராய்டு மொபைல் வழியாக முன்பதிவு செய்தால் வேறு கட்டணமும் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.
சஹர் டாக்ஸி சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா எந்தக் காலக்கெடும் அறிவிக்கவில்லை. ஆனால், இந்தத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் முன்னர் முன்னோட்டமாக சில நகரங்களில் செயல்படுத்தி பார்க்கப்படும்.
இதையும் படிங்க: இந்தியாவில் கடுமையாகும் விசா விதிகள்: மீறினால் 7 ஆண்டுகள் சிறை 10 லட்சம் அபராதம்… கழுதை பாதை!