பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தந்த இந்தியா மீது, பாக்., ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை, பாக்., ராணுவம் மீதும் பாய்ந்தது. இதனால், 7ம் தேதி இரு தரப்பு சண்டை துவங்கியது. அந்நாட்டின் 11 விமானப்படை தளங்களை இந்தியா தகர்த்தது. நம் நாட்டில் இருந்தபடியே சக்திவாய்ந்த மிசைல்களை ஏவிய நம் விமானப்படை, பாகிஸ்தானை சுக்குநுாறாக்கியது.

நம் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான், 10ம் தேதி உலக நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடியதுடன், நம் ராணுவ இயக்குனர் ஜெனரலை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தார். இனியும் பயங்கரவாத தாக்குதலோ, அவர்களுக்கு ஆதரவான பாக்., ராணுவ தாக்குதலோ தொடர்ந்தால், இந்தியா அதை வேடிக்கை பார்க்காது என்ற எச்சரிக்கையுடன் நம் முப்படைகள் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன.
இதையும் படிங்க: பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?
இதனை அடுத்து பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி வைத்துள்ள மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள களைகளை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. பயங்கரவாதிகளை ஒருபுறம் வேட்டையாடி வந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திர சிங் தில்லான், வயது 25. பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கிறார்.மே 12ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டார். இதனால் ஹரியானாவின் கைதல் நகரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

தேவேந்திர சிங் 2024 நவம்பரில் பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராக்கு யாத்திரை சென்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பினருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தேவேந்திர சிங்கை மூளை சலவை செய்த அவர்கள் பணம் கொடுத்து இந்தியா பற்றிய ரகசியங்களை கேட்டுள்ளனர். அப்போது பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளிடம் தேவேந்திர சிங் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

யாத்திரை முடிந்து இந்தியா திரும்பிய பிறகும் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஒவ்வொரு முறை தேவேந்திர சிங் ரகசியம் சொல்லும் போதும் பாகிஸ்தானில் இருந்து அவருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட்டின் படங்களையும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து வந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை பற்றி தொடர்ந்து பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு சொல்லி வந்துள்ளார். தற்போது தேவேந்திர சிங் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேவேந்திர சிங்கிற்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் குறித்து அறிய அவரது வங்கிக் கணக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவரை போலவே பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பானிபட்டில் 24 வயதான நௌமன் இலாஹி என்கிற இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் காவலராக பணிபுரிந்த இவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தகவல் கொடுத்ததற்காக பணம் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களுடன் ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மேலும், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்டவைகளிலும் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். ஜோதி மல்ஹோத்ராவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!