ஹைதராபாத்: இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையானது இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி). இதன் ஹைதராபாத் கிளையில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவர் எட்வர்ட் நாதன் வர்கீஸ் (21) பெரும் சாதனை புரிந்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஆப்டிவேர்’ என்ற பங்குச் சந்தை தொழில்நுட்ப நிறுவனம் அவருக்கு ஆண்டுக்கு 2.50 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது. ஐஐடி ஹைதராபாத் வரலாற்றில் இவ்வளவு உயர் சம்பளத்தில் வேலை பெறும் முதல் மாணவர் என்ற பெருமையும் வர்கீசுக்கு கிடைத்துள்ளது.
ஹைதராபாதைச் சேர்ந்த எட்வர்ட் நாதன் வர்கீஸ், 2022ஆம் ஆண்டு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் 558வது இடம் பிடித்து ஐஐடி ஹைதராபாத்தில் சேர்ந்தார். மென்பொருள் நிரலாக்கத்தில் ஆர்வம் கொண்ட அவர், இளநிலை கணினி அறிவியல் பிரிவை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க: அமெரிக்கா: மலையில் மோதிய ஹெலிகாப்டர்..!! பரிதாபமாக பறிபோன 4 உயிர்..!!
சில மாதங்களுக்கு முன் ‘ஆப்டிவேர்’ நிறுவனத்தில் களப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) செய்ய தேர்வானார். அங்கு ‘கிளவுட்’ கட்டமைப்பு மற்றும் ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்றார்.

கடும் அழுத்தங்கள் நிறைந்த சூழலிலும் சிறப்பாக செயல்பட்டு, சரியான முடிவுகளை எடுத்து நிறுவனத்தை கவர்ந்தார் வர்கீஸ். இதன் காரணமாக நிறுவனம் அவருக்கு ஆண்டுக்கு 2.50 கோடி ரூபாய் சம்பளத்தில் நிரந்தர வேலை வழங்க முடிவு செய்தது. இதற்கு முன் ஐஐடி ஹைதராபாத்தில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு உலகளாவிய நிறுவனங்களில் உயர் சம்பள வேலைவாய்ப்புகள் கிடைப்பது வழக்கம். ஆனால், இவ்வளவு உயர் தொகையில் வேலை பெறுவது ஐஐடி ஹைதராபாத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. வர்கீசின் சாதனை அந்நிறுவன மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: சூரஜ் எங்கே? முறையாக சிகிச்சை பார்க்காமல் அனுப்பி வைத்த திமுக...! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!