தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; இந்தியா 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. நாம் நான்காவது பெரிய பொருளாதாரமாகி விட்டோம். 4 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.340 லட்சம் கோடி) பொருளாதாரமாகி விட்டோம். ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்திவிட்டது எனக் கூறிய சுப்பிரமணியம், தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகள்தான் இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன என்றார். திட்டமிட்டபடி, எண்ணியபடி உறுதியாக செயல்பட்டால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடுவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: I.N.D.I.A கூட்டணியில் விரிசல்? மு.க ஸ்டாலின் IN.. சித்தராமையா, மம்தா Out.. நிதி ஆயோக் கூட்டத்தால் பரபரக்கும் அரசியல்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ ஐபோன்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று கூறியது குறித்து கேட்டபோது, வரி விதிப்பில் மாற்றம் வரலாம். அது குறித்து ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தியாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்'' என சுப்பிரமணியம் பதில் அளித்தார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4 -வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று, வரும் 2028-ம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஜெர்மனியின் பொருளாதாரம் 5,251.928 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் இந்தியாவின் ஜிடிபி அதனை விஞ்சி 5,584.476 பில்லியன் டாலாராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட நாடாக வரும் 2027-ம் ஆண்டில் உருவெடுக்கும். அப்போது இந்தியாவின் ஜிடிபி 5,069.47 பில்லியன் டாலராக இருக்கும். மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் நடப்பாண்டில் எப்போதும்போல் முதல் இரண்டு இடங்களை அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவையே தக்கவைக்கும். அவர்கள் இந்த தரவரிசையை இந்த தசாப்தம் முழுவதும் தக்கவைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஐஎம்எப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதுதான் ரைட் டைம்! பாக்., பண்ண காரியத்துக்கு பதிலடி கொடுத்தே ஆகணும்! அமெரிக்காவில் முழங்கிய சசி தரூர்!