மத்திய கிழக்கில் தொடரும் போர் மோதல்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் எதிரொலி இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாகக் குறைந்து ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் எரிபொருள் சேமிப்புக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். கடந்த 10ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கொரோனா காலத்தைப் போன்று வீட்டிலிருந்து பணி, ஆன்லைன் மீட்டிங்கள், வீடியோ கான்பரன்ஸ் ஆகியவற்றை ஊக்குவிக்குமாறு வலியுறுத்தினார். பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை அதிகரிக்கவும், தேவையில்லாத பயணங்களைக் குறைக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

குறிப்பாக, ஒரு ஆண்டு காலத்துக்கு திருமணங்களுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும், வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்தியாவின் அந்நிய செலவாணி செலவு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவே பெருமளவு அந்நியச் செலவாணி செலவிடப்படும் நிலையில், இந்த நடவடிக்கைகள் மூலம் இறக்குமதியை மட்டுப்படுத்தி பொருளாதார நிலையை சமாளிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடவடிக்கை தங்கம் உள்ளிட்ட விலைமதிப்புள்ள உலோகங்களின் உள்நாட்டு விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கத் துறையின் அறிவிப்பின்படி, நகை தயாரிப்புக்கான உதிரிப் பாகங்கள் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி நகைகளுக்கான கொக்கிகள், பிணைப்புகள், ஊசிகள், திருகு பின்புறங்கள் போன்ற சிறிய பாகங்களுக்கு 5 சதவீத சுங்க வரியும், பிளாட்டினம் பாகங்களுக்கு 5.4 சதவீத வரியும் விதிக்கப்படும். இந்த வரி உயர்வு, பிரதமர் மோடியின் தங்கம் வாங்கக் கூடாது என்ற வேண்டுகோளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை அந்நிய செலவாணி கையிருப்பைப் பாதுகாக்க உதவும் என்றாலும், தங்கத்தின் மீதான தேவை அதிகமுள்ள இந்தியச் சந்தையில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். திருமண சீசன் உள்ளிட்ட காலங்களில் தங்கம் வாங்கும் பழக்கத்தை மக்கள் குறைத்துக்கொண்டால், இறக்குமதி அழுத்தம் கணிசமாகக் குறையும் என அரசு நம்புகிறது.
ஒட்டுமொத்தமாக, உலக அரங்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் இந்தியப் பொருளாதாரத்தை சவாலுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகளுடன் மக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை பிரதமரின் அறிவுறுத்தல் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!