புது டெல்லி: சுதந்திரத்துக்குப் பிறகு எட்டாவது முறையாக இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (ஏப்ரல் 1) முதல் தொடங்குகிறது. கோவிட் தொற்று காரணமாக 2021-ல் ஒத்திவைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட பணி, இந்த முறை முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது.
தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்ஜய் குமார் நாராயணன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடு முழுவதும் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது. இந்த முறை பொதுமக்கள் தங்களது விவரங்களை தாங்களே இணையதளம் வழியாக பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
16 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, உருது உள்ளிட்டவை) சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுய விவரங்களை பதிவு செய்பவர்களுக்கு 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். கணக்கெடுப்பாளர் வீட்டுக்கு வரும்போது இந்த எண்ணை மட்டும் காட்டினால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிங்க: சுங்க கட்டண உயர்வு தேவையா? மக்களை சுரண்டும் மத்திய அரசு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!!
கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். இதில் ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும்.

முதல் கட்டத்தில் 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். 33 கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 15-ன் படி, இந்தத் தகவல்களை நீதிமன்றத்திலோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழோ கேட்டுப் பெற முடியாது.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை ஜூலை 17 முதல் 31 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். நேரடி கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெறும். புதுச்சேரியில் சுய பதிவு மே 17 முதல் 31 வரையும், நேரடி கணக்கெடுப்பு ஜூன் 1 முதல் 30 வரையும் நடைபெறும்.
லிவ்-இன் உறவில் வாழ்பவர்களை திருமணம் ஆன தம்பதியராகவே கணக்கில் எடுக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, உணவு முறை, பழக்கவழக்கங்கள், வீட்டின் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு மூலம் துல்லியமான தரவுகள் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு இலவச பஸ்!! மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000!! கேரளத்தில் ராகுல்காந்தி வாக்குறுதி!