பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் நெருக்கமாக தொடர்பில் இருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை மாநில தீவிரவாதத் தடுப்புப்படையினர் நேற்று கைது செய்தனர். கடந்த சிலநாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வகையில் கைதான 2வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் உ.பி.யில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பெயர் ஷெசாத் என்பது தெரியவந்தது, இவரை மொராதாபாத்தில் இருந்து ஏடிஎஸ் படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புக்கு யாரெல்லாம் உதவுகிறார்கள், உளவு சொல்கிறார்கள் என்பது குறித்து தேசிய அளவில் தீவிரவாதத் தடுப்புப்படை, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் வேட்டையில் இறங்கின. அந்த வகையில் யூடியூப்பர்கல், சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் என பலர் கைதாகி விசாரணையில் இருந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலோடு முடியப்போறது இல்லை.. பாக்., ஐ.எஸ்.ஐ-யின் அடுத்த பிளான் தெரியுமா? பகீர் கிளப்பும் என்.ஐ.ஏ!!
உ.பி. தீவிரவாதத் தடுப்புப்படை வெளியிட்ட அறிக்கையில் “ பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐவுடன் நெருக்கமாக இருந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போதை மருந்து கடத்தலில் ஷெசாத் ஈடுபடுவதாக நம்பத்தகுந்த முறையில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷெசாத்தை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தோம்.

விசாரணையில் ஷெசாத் பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்தி்ருப்பதும், சட்டவிரோதமாக எல்லைதாண்டி அழகுசாதனப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், சமையல் பொருட்கள், உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததும் தெரியவந்தது. உளவு கூறும் நடவடிக்கையின் ஒருபகுதியாகத்தான் கடத்தல் நடவடிக்கையிலும் ஷெசாத் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடனும், அதன் நிர்வாகிகளுடனும் ஷெசாத் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு குறித்து நம்பத்தகுந்த தகவல்கள், ரகசிய தகவல்களையும் ஷெசாத் பரிமாறியுள்ளார். தகவல்களை மட்டும் ஐஎஸ்ஐ அமைப்புக்கு ஷெசாத் விற்பனை செய்யாமல், இந்தியாவில் ஐஎஸ்ஐ அமைப்பு நடமாடவும், உளவு பார்க்கவும் வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஷெசாத் அவர்களின் உத்தரவுப்படி நடந்து, பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிதியை இந்தியாவில் இருக்கும் ஐஎஸ்ஐ அமைப்பு நிர்வாகிகளுக்குவழங்கியுள்ளார். ராம்பூரில் இருந்து பலரை உ.பியில் பல்வேறு பகுதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் அனுப்ப ஷெசாத் உதவியுள்ளார்.

கடத்தலில் ஈடுபட்ட ஷெசாத், ஐஎஸ் தீவிரவாத அமைப்பிலும் இளைஞர்களை சேர்க்க உதவிகளைச் செய்துள்ளார். ஐஎஸ்எஸ் நிர்வாகிகள் இந்தியா வந்து செல்ல தேவையான விசாக்கள், போக்குவரத்து ஆவணங்களையும் போலியாக ஷெசாத் தயாரித்து வழங்கியுள்ளார். மேலும் சிம் கார்டுகள், தகவல் தொடர்பு சாதனங்களையும் ஐஎஸ்ஐ அமைப்புக்கு ஷெசாத் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, ஷெசாத் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 148, 152 பிரிவின் கீழ் லக்னெள ஏடிஎஸ் போலீஸார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். இவரை விரைவில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் என்ட்ரி.. சிக்கிய 4 சீனர்கள்..!