இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் வெளியேறி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், விண்வெளித் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட முதல்நிலை விஞ்ஞானிகள் பணியை விட்டு வெளியேறியுள்ளதாகவும், சமீப காலங்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இஸ்ரோவின் முக்கிய விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஞ்ஞானிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு நடவடிக்கைகளுக்கு விண்வெளித் துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முக்கிய திட்டங்கள் நடைபெறும் காலகட்டத்தில் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளின் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதே இதன் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாதம் ஒரு ராக்கெட் ஏவ இலக்கு! அடுத்த மெகா திட்டம்!விக்ரம்-1' வெற்றிக்குப் பிறகு ஸ்கைரூட் அதிரடி அறிவிப்பு!
கடந்த 2020-ம் ஆண்டு விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு, இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. தற்போது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்சல், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், துருவா ஸ்பேஸ், திகந்தரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் வடிவமைப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப துறைகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், இஸ்ரோவில் பணியாற்றும் திறமையான இளம் விஞ்ஞானிகளை ஈர்க்க அதிக ஊதியம், முக்கிய பொறுப்புகள் மற்றும் புதிய திட்டங்களில் நேரடியாக செயல்படும் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் தாக்கமாக, இஸ்ரோவின் சில திட்டங்களில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ககன்யான் ஜி1, எஸ்.எஸ்.எல்.வி.-எல்1, ஜி.எஸ்.எல்.வி.-எப்17 உள்ளிட்ட திட்டங்களின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு பல விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இஸ்ரோ உள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளின் பங்களிப்பு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தனியார் விண்வெளித் துறையின் வளர்ச்சி இந்தியாவின் விண்வெளி கனவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நிலையில், அதே நேரத்தில் இஸ்ரோ போன்ற முக்கிய நிறுவனங்களில் திறமையான மனிதவளத்தை தக்கவைத்துக்கொள்வது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய விண்வெளித் துறையில் புதிய சகாப்தம்! இளைஞர்களின் கனவை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் விக்ரம்-1!