ஜம்மு காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மீண்டும் ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களை ஒட்டிய எல்லைப்பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக கருதப்படும் ட்ரோன்கள் ஊடுருவ முயன்றதாகவும், அந்த முயற்சியை இந்திய பாதுகாப்புப் படையினர் முறியடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லைப்பகுதியில் இந்திய பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும், பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு உதவுவதற்கும் பாகிஸ்தான் தரப்பில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றன. இதுபோன்ற ட்ரோன் நடமாட்டங்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு, பாதுகாப்புப் படைகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியிலும் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் அதிரடி வேட்டை! 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்! சதி திட்டம் முறியடிப்பு?
இந்த நிலையில், தற்போது பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய பாதுகாப்புப் படையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ட்ரோன்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் அப்பகுதியில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் அல்லது போதைப்பொருட்களை வீசி சென்றிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்ட பகுதிகளை சுற்றி பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லைப்பகுதியில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது பாதுகாப்புப் படைகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சிறிய அளவிலான ட்ரோன்களை கண்டறிவது மற்றும் அவற்றின் மூலம் ஏதேனும் பொருட்கள் வீசப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது முக்கியமானதாக உள்ளது.
தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையோர கிராமங்களிலும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் அல்லது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. தேடுதல் நடவடிக்கை முடிவடைந்த பின்னரே இதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்துக்கு என்ஐஏ சம்மன்!