மதம், ஜாதி, இனம் மற்றும் பாலின அடிப்படையில் வெறுப்பைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில், ‘கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா 2025’ இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், வெறுப்புப் பேச்சுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றிய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையைக் கர்நாடகா பெற்றுள்ளது. சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுபவர்கள் மற்றும் எழுதுபவர்கள் மீது இந்தச் சட்டம் பாயும் வகையில் அமைந்துள்ளது.
மதம், சாதி, இனம், மொழி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தனிநபர் அல்லது அமைப்புக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது, எழுதுவது அல்லது இணையத்தில் பதிவிடுவது குற்றமாகக் கருதப்படும்.
முதன்முறையாக இக்குற்றத்தைச் செய்பவர்களுக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹50,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் தண்டனை 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படலாம். இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் பிணையில் வெளிவர முடியா மற்றும் பிடியாணையின்றி கைது செய்யத்தக்க குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பி.எம். கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?... இந்த 3 விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதா?
வெறுப்புப் பேச்சால் மனதளவிலோ அல்லது உடலளவிலோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க நீதிமன்றத்திற்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. சமூக வலைதளங்கள் அல்லது இணையதளங்களில் பதிவேற்றப்படும் வெறுப்புப் பேச்சு தொடர்பான உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கவோ அல்லது முடக்கவோ அரசுக்கு இந்தச் சட்டம் முழு அதிகாரம் வழங்குகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டம் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், மாநிலத்தில் நிலவும் வகுப்புவாத மோதல்களைத் தடுக்கவும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் இத்தகைய கடுமையான சட்டம் அவசியம் என முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!