பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கங்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது இந்திய அரசியல் வரலாற்றில் மிகத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று கூறினார்.
காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் சித்தாந்தம் குறித்து தனக்கு கவலையில்லை என்றும், ராகுல் காந்தி எந்த சித்தாந்தத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது ஏற்க முடியாதது என்று கடுமையாக விமர்சித்தார்.
“நாங்கள் எதிரிகள் அல்ல. வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நாட்டுக்காகப் பணியாற்றுகிறோம். 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே பிரதமர் மோடியின் கனவு” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மிரட்டல்!! அமளியால் முடங்கியது பார்லிமெண்ட்! பாஜக - காங்., வாக்குவாதம்!
பிரதமருக்கு எதிரான இத்தகைய கீழ்த்தரமான கருத்துகளை இதுவரை பார்த்ததில்லை என்றும் அமைச்சர் வேதனை தெரிவித்தார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸுக்கு இன்னும் மனிதாபிமானமும் நாட்டு மக்கள் மீது அக்கறையும் இருந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்போதும் எதிர்க்கட்சித் தலைவர்களை அவமரியாதை செய்ததில்லை, உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். உலகமே பிரதமர் மோடியை அங்கீகரிக்கும் நிலையில் இத்தகைய மிரட்டல் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எந்தப் பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயார் என்றும், ஆனால் அவையை விட்டு வெளிநடப்பு செய்து பிரதமரைத் திட்டுவதை ஏற்க முடியாது என்றும் கிரண் ரிஜிஜூ தெளிவாகக் கூறினார்.
இந்த சர்ச்சை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: பார்லி., கூட்டத்தொடருக்கு டாடா!! ராகுல்காந்தி ஜெர்மனி பயணம்! வறுத்தெடுக்கும் பாஜக!