பாம்பு பிடி வீரர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தைரியமான நபர்களாக திகழ்கின்றனர். இவர்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் விஷ பாம்புகளை பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடுவிக்கின்றனர். பாம்பு பிடி வீரர்கள், குறிப்பாக நறிக்குறவர் சமூகத்தினர், இயற்கையுடன் இணைந்து வாழும் திறனைக் கொண்டுள்ளனர்.

ஆனால், இவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளும் ஏராளம். சிலர் பாம்பு கடியால் கண்பார்வை இழந்தோ அல்லது உயிரிழந்தோ உள்ளனர். இதனால், இவர்களுக்கு முறையான பயிற்சி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும். இவர்களின் பங்களிப்பு, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: 2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?
இந்நிலையில் பாம்புப்பிடி வீரர் ஒருவர் பாம்புக்கடியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ராகோகர் பகுதியை சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் தீபக் மஹாவர் (Deepak Mahawar). இவர், பல ஆண்டுகளாக பாம்புகளைப் பிடித்து மக்களைக் காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் குணால் மாவட்டத்தின் பர்பத்புரா கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதை பிடிக்கு வருமாறும் தீபக் மஹாவருக்கு கல்வி நிறுவனம் சார்பில் அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர், அந்த விஷப்பாம்பை லாவகமாக பிடித்தார்.
பின்னர் தனது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக, பிடித்த பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு சென்றபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பாம்பு அவரது கையை கடித்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபக், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

ஆனால், அன்று இரவு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்து, பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ராகோகர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபக் மஹாவர், நூற்றுக்கணக்கான மக்களைப் பாம்பு கடியிலிருந்து காப்பாற்றியவர் என்று உள்ளூர் மக்கள் புகழ்ந்து பேசுகின்றனர். அவரது தைரியமும், பாம்புகளைப் பிடிக்கும் திறமையும் பலருக்கு உதவியாக இருந்தது.
ஆனால், இந்த முறை அவரது சாகச முயற்சி அவருக்கு ஆபத்தாக முடிந்தது. தீபக் மஹாவரின் மறைவு, பாம்பு பிடி வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் முறையான பயிற்சியின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. மேலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே பள்ளிக்கு செல்லும் வழியில் பிடிபட்ட பாம்புடன் தீபக் மஹாவர் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=QN6iBA7VRvs
இதையும் படிங்க: நேட்டோவுக்கு டேக்கா கொடுத்த இந்தியா!! வார்னிங்கா? எங்களுக்கா? தரமான பதிலடி!