இந்திய பிரதமர் Narendra Modi மற்றும் இத்தாலி பிரதமர் Giorgia Meloni சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இரு தலைவர்களுக்கும் இடையேயான நட்பு மற்றும் இயல்பான உரையாடல்கள் பலமுறை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஜி7 மாநாட்டில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவையான சம்பவம் மீண்டும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.
பிரான்சின் ஈவியன் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். மாநாட்டின் ஒரு நிகழ்வில் உலகத் தலைவர்கள் ஒன்றாகக் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டபோது, மோடி மற்றும் மெலோனி நேருக்கு நேர் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கி உரையாடிய காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.
அப்போது, “உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி” என்று மெலோனி கூறியதாகத் தெரிகிறது. அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி “இன்ஸ்டாகிராம்” என்று குறிப்பிட்டவுடன், உடனடியாக சிரித்துக் கொண்ட மெலோனி, “ஆம், இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகவும் பிரபலமான ஜோடி” என்று நகைச்சுவையாக பதிலளித்ததாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த உரையாடல் அங்கிருந்த மைக்ரோஃபோனில் தெளிவாக பதிவாகியிருந்ததால், அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!

கடந்த சில மாதங்களாக மோடி மற்றும் மெலோனி தொடர்பான புகைப்படங்கள், செல்ஃபிகள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்ஃபி மற்றும் நட்புறவை வெளிப்படுத்தும் பதிவுகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றன. இதனால் சமூக வலைதள பயனர்கள் இவர்களை “மெலோடி” என்ற பெயரால் அழைத்து வந்தனர்.
தற்போது ஜி7 மாநாட்டில் இடம்பெற்ற இந்த நகைச்சுவையான உரையாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அரசியல் தலைவர்களின் அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கு இடையே இவ்வாறான இயல்பான தருணங்கள் வெளிப்படுவது அரிதான ஒன்று என்பதால், இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: உலகப் பொருளாதாரத்திலும், அரசியலிலும் இந்தியாவின் பங்கேற்பு!! கனடா பிரதமர் மார்க் கார்னி புகழாரம்!