தமிழகச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, பெரம்பலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (IJK) ‘மைக்’ (Mike) சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
வரும் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள ஐஜேகே, தங்களுக்குப் பொதுவான ஒரு தனிச் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், ஐஜேகே கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த தேர்தல்களில் மோதிரம் உள்ளிட்ட சின்னங்களில் போட்டியிட்ட அக்கட்சிக்கு, இந்த முறை புதிய அடையாளமாக 'மைக்' கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் திருப்பம்.... இரட்டை இலையை பிடித்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து வரும் ஐஜேகே, இந்தச் சின்னத்தைப் பயன்படுத்தித் தனது தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் கவரும் வகையில் இந்தச் சின்னம் அமைந்துள்ளதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.
மக்களின் குரலை ஒலிக்கச் செய்ய மைக் என்ற முழக்கத்துடன் பிரசாரக் களத்தில் இறங்க ஐஜேகே தயாராகி வருகிறது.
நாளை திருச்சியில் நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய சின்னத்துடன் ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "திமுகவிடம் 3 தொகுதிகள் வேண்டும்": அண்ணா அறிவாலயத்தில் அதிமமுக அதிரடி கோரிக்கை!