இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு முதல் பெட்ரோலில் 20% எத்தனால் கலந்த E20 எரிபொருள் நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இறக்குமதி எண்ணெய் சார்பை குறைப்பதாகவும் மத்திய அரசு கூறுகிறது. இருப்பினும், E20 எரிபொருளால் வாகனங்களில் மைலேஜ் குறைவு, இன்ஜின் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 எரிபொருளுக்கு முழுமையாக பொருந்தாது என்றும், இதனால் ரப்பர் கூறுகள், எரிபொருள் குழாய்கள் போன்றவை அரிமானம் அடைவதாகவும் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கின்றனர். மைலேஜ் 3-6% வரை குறையலாம் என்று கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த அகாங்க்ஷா பொக்டியா உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், E20 பயன்பாட்டால் மைலேஜ் குறைந்து, வாகன செயல்திறன் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்.. எதிர்பார்ப்பில் பகுதிநேர ஆசிரியர்கள்..!
இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம், E20 எரிபொருள் பாதுகாப்பானது என்றும், இதனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) மற்றும் இந்தியன் ஆயில் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வுகளில், E20 பயன்பாட்டால் இன்ஜின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், E20 எரிபொருளில் அரிமான தடுப்பான்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 20,000-30,000 கி.மீ. பயணத்திற்கு பின் சில ரப்பர் பாகங்களை மாற்றினால் போதுமானது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) பயன்பாடு எந்தவொரு வாகனத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். பரிசோதனைகளின் அடிப்படையில், பழைய வாகனங்கள் உட்பட எந்த வாகனத்திலும் E20 எரிபொருளால் பாதிப்பு இல்லை என அவர் உறுதிப்படுத்தினார்.
எத்தனால் மற்றும் ஃப்ளெக்ஸ் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க வாகன உற்பத்தியாளர்களை வலியுறுத்தியுள்ள நிதின் கட்கரி, இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிபொருள் செலவை குறைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், ரஷ்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெட்ரோல்-எத்தனால் விலை வித்தியாசத்தை குறைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் சாலை கட்டமைப்பை அமெரிக்க தரத்திற்கு உயர்த்துவதாகவும், சாலை விபத்துகளை 2030-க்குள் 50% குறைப்பதற்கு தரமான சாலைகள் மற்றும் எரிபொருள் மாற்று தீர்வுகளை மேம்படுத்துவதாகவும் கட்கரி குறிப்பிட்டார்.

நிதின் கட்கரி மேலும் கூறுகையில், "எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்பு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ₹1,200-க்கு விற்கப்பட்டது. இப்போது அது எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ஒரு குவிண்டால் ₹2,600 வரை விற்கப்படுகிறது. இது கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிராகச் சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் முறையாகச் சோதிக்கப்பட்ட பிறகே நாங்கள் அறிவிப்புகளை வெளியிடுகிறோம்" என்ற அவர் தெரிவித்தார்.
எத்தனால் கலப்பு 1.4 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தியதுடன், 700 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தை குறைத்துள்ளது. இருப்பினும், வாகன உரிமையாளர்களுக்கு E20 மற்றும் E0 எரிபொருளை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழையில அடிச்சிட்டு போயிருக்கும்! காணாமல் போன நிலக்கரிக்கு வினோத விளக்கம் கொடுத்த அமைச்சர்..!