காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன்பு அவர்களிடத்தில் மதம் குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்துக்களை சுட்டுக் கொன்றதாகவும், முஸ்லீம் என கூறியவர்களை குரான் ஓத சொல்லி சோதித்ததாகவும் அங்கிருந்த மக்கள் கூறினர்.

இதன் காரணமாக உயிர் பிழைக்க மதத்தை மாற்றி கூறியவர்களும் கொல்லப்பட்டனர். இந்துக்கள் தனியாகவும், முஸ்லீம்கள் தனியாகவும் அமர வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் கூறினர். பெண்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. அதில் ஒரு பெண், என் கணவரை கொன்றதை போல என்னையும் கொன்று விடுங்கள் என கெஞ்சிய போது, இங்கு நடந்ததை மோடியிடன் சென்று சொல் என பயங்கரவாதிகள் திமிராகவும் பேசினர். இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மரண அடி.. பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்தது இந்தியா.. பாக்லிஹார் அணை நீர் நிறுத்தம்..!

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில், கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒருவாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருந்தார். தேனிலவுக்காக அவர்கள் சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் வினய் நர்வாலை சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொல்லும் முன் அவரது மதம் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து ஹிமான்ஷியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பலரும் விமர்சித்தும் வருகின்றனர். இதையடுத்து ஹிமான்ஷிக்கு எதிரான விமர்சனங்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணை அவருடைய கருத்து வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் கேலி செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. லெப்டினன்ட் வினய் நர்வால் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூக ஊடகங்களில் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது என்று ஹிமான்ஷிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குறி வச்சா இரை விழும்! ரஷ்யா ஏவுகணையுடன் களமிறங்கிய இந்தியா.. வேட்டை ஆயுதத்தால் குலைநடுங்கும் பாக்.!