பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பியாஸ் பிண்டி கிராமத்தில் 1911ல் பிறந்தவர் பவுஜா சிங். தனது 89-வது வயதில் விடாமுயற்சியால் மாரத்தான் ஓட்டங்களில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். 114 வயதான போதும் பவுஜா சிங் ஆரோக்கியமாக இருந்தார்.
நேற்று மதியம் 3.30 மணியளவில் வழக்கம்போல, வீட்டுக்கு அருகில் உள்ள ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அடையாளம் தெரியாத
கார் அவர் மீது மோதியது.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவுஜா சிங், அங்கு இறந்தார். டர்பன் கட்டிய சூறாவளி என்று அழைக்கப்பட்ட பவுஜா சிங் மறைவுக்கு, பிரதமர் மோடி, பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? பிரதமர் மோடிக்கு செக் வைக்கும் ராகுல்காந்தி!!
பவுஜா சிங் ஒரு உத்வேகமளிக்கும் ஆளுமையாக விளங்கினார். வயதை பொருட்படுத்தாமல் முன்னேற முடியும் என்பதை அவரது வாழ்வு உணர்த்தியது. அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பிரதமர்மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பவுஜா சிங் 89-வது வயதில் மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்க தொடங்கினார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடந்த பல மாரத்தான்களில் பங்கேற்று சாதனைகள் படைத்தார்.
2003ல் லண்டன் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பவுஜா சிங், பந்தய தூரமான 42 கிலோ மீட்டரை 6 மணி நேரம் 2 நிமிடங்களில் கடந்து 90 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் உலக சாதனை படைத்தார். 2011ல் அவருக்கு 100 வயது. அப்போது, கனடாவின் டொரோண்டோ நகரில் நடந்த மாரத்தான் போட்டியில் 8 மணி நேரம் 11 நிமிடம் 6 வினாடிகளில் 42 கிமீ தூரத்தை கடந்து அசத்தினார்.

இதன்மூலம் 100 வயது நிரம்பிய உலகின் முதலாவது மாரத்தான் ஜாம்பவான்' என்ற பெருமையை பெற்றார். அவரது சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. இந் நிலையில், பவுஜா சிங் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார். அவரது சொந்த ஊரான கர்தார்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் அண்மையில் தான் கனடாவில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருந்தார்.
சம்பவ பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் பதிவு எண்ணையும் அடையாளம் கண்டனர். கபூர்தலாவைச் சேர்ந்த வரிந்தர் சிங் என்பவரின் கார் என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரின் கிராமத்துக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் கர்தார்பூரைச் சேர்ந்த அமிர்தபால் சிங் தில்லான் என்பவரிடம் காரை விற்றுவிட்ட தகவலை தெரிவித்துள்ளார். கார் வாங்கி இருந்தாலும் அதன் ஆவணங்களை தம் பெயருக்கு மாற்றாமல்,வரிந்தர் சிங் பெயரிலேயே அமிர்தபால் சிங் தில்லான் பயன்படுத்தி இருக்கிறார்.
விபத்து நிகழ்ந்த நேரத்தில் அவர் தான் சொகுசு காரை ஓட்டிச் சென்று பவுஜா சிங் மீது மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி.. ஹைஅலர்ட்டில் கேரளா..!!