திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமிகள் மடம் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த நிலம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.2 கோடிக்கு தனிநபர்களின் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், நிலம் தொடர்பான ஆவணங்கள், பத்திரப்பதிவு அலுவலக நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பங்கு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: மக்களே குட் நியூஸ்..! பழனியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்..! முக்கிய அறிவிப்பு..!!
இந்த வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி, ஆவணங்கள் தயாரிப்பில் தொடர்புடைய வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் கைது செய்யப்பட்டு, பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், பத்திரப்பதிவு தொடர்பான அவரது பங்கு குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இடைத்தரகர் ஜெயபிரகாஷை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், வீட்டுக்கும் சீல் வைத்தனர். இந்த விவகாரத்தில் அவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கறிஞர் சிவக்குமார் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் சிவசங்கரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இடைத்தரகர் ஜெயபிரகாஷுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் வழக்கறிஞர் சிவக்குமாரையும் சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம், பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் எவ்வாறு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது, அதற்கான ஆவணங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன, பத்திரப்பதிவு அலுவலகத்தில் யார் யார் உடந்தையாக இருந்தனர் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தின் உரிமை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள், பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!