ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நாம் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது என்று கூறினார்.

மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை வெறும் 22 நிமிடங்களில் அழித்தோம். நமது முப்படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம் என கூறிய அவர், மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?

தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது என்றும் பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமிர்த்தி நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படி பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக பற்றி மட்டுமே இருக்கும் என்று பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: காங்கிரஸில் அவமானப்படுத்த முயற்சியா? பிரதமர் மோடி கொடுத்த வாய்ப்பால் சிக்கலில் சசிதரூர்..!