விமானக் கடத்தல் முயற்சியை முறியடித்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃப்ளைடுபாய் விமானத்தை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த விமானத்தின் பைலட்டாக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார். விமானத்தின் துணை பைலட்டாக இருந்த நபர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி தாக்கியதோடு, விமானத்தைக் கடத்தி அதை மோதி விபத்துக்குள்ளாக்கத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
ட்வின் டவர் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைப் போன்றே, விமானத்தைக் கடத்தி மோதி தாக்குதல் நடத்த துணை விமானி திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக அரசியலில் பரபரப்பு... திடீரென அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு போன் போட்ட பிரதமர் மோடி... என்ன நடந்தது?
இருப்பினும், கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த நிலையிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் அந்த துணை விமானியுடன் துணிச்சலுடன் போராடியுள்ளார். தொடர்ந்து, காக்பிட் கதவைத் திறக்க முடிந்த நிலையில், மற்ற பயணிகளும் விமான ஊழியர்களும் உள்ளே சென்று துணை விமானியை மடக்கிப் பிடித்துள்ளனர். இதன் மூலம் விமானக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த போதிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் உலக அளவில் ஹீரோவாக மாறியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரை பாராட்டியுள்ளார்.
மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், பலத்த காயமடைந்த நிலையிலும் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற கேப்டன் ஸ்மித் மச்சார் அளப்பரிய துணிச்சலையும் அசைக்க முடியாத மன உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவரது வீரச் செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன், மிகப்பெரிய துயரத்தைத் தவிர்க்கவும் உதவியதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேப்டன் ஸ்மித் மச்சார் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், அவர் விரைவில் குணமடைந்து, புத்துணர்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெடி..! அக். 11 ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!