எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலோனர் சுற்றுலாப் பயணிகள். இந்தக் கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து வருவதும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு எதிர் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் பதவியில் உள்ளவர்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து பிதற்றி வருகின்றனர். அந்த வரிசையில் ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி ஆர்டி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பிதற்றியுள்ளார். அவர் கூறுகையில், "இந்தியாவின் வெறித்தனமான ஊடகங்களும், அங்கிருந்து வரும் சில பொறுப்பற்ற அறிக்கைகளும் எங்களை சில கட்டாயத்துக்கு நிர்பந்தம் செய்கின்றன. இந்தியாவிலிருந்து கசிந்துள்ள சில தகவல்கள் பாகிஸ்தான் மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

எங்களைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் போர் என்று வரும் போது நாங்கள் எண்ணிக்கை பலம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான பதிலடியோடு, அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். பாகிஸ்தான் மக்களின் முழு ஆதரவுடன் ராணுவம் முழு சக்தியையும் வெளிப்படுத்தும்.” என்று முகம்மது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லையில் தெறித்து ஓடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. இந்திய ராணுவம் குவிப்பால் பீதியில் தீவிரவாதிகள்!
இதையும் படிங்க: அடுத்த அடி.. பாகிஸ்தான் தபால்கள், பார்சல்களுக்கு தடை.. கேப் விடாமல் நொறுக்கும் இந்தியா!!