வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்னொரு பெரிய அடி! அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில், அவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது கடந்த வாரம் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்குப் பிறகு வந்த மூன்றாவது பெரிய தீர்ப்பு. இந்தியாவில் தஞ்சமாக இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு இப்போது வெளியே வர இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது. அது பெரிய வன்முறையாக மாறி, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்கு பிறகு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஹெலிகாப்டரில் இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை கைது பண்ணி கூட்டிட்டு வாங்க!! இண்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்!
புதிய அரசு அமைந்த உடன், அவருக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த வாரம், போராட்டத்தில் போலீஸ் சுட்டுக் கொன்றதாகக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் 6 மாத சிறை வாங்கினார்.
இப்போது வந்தது புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில் நில ஊழல் வழக்கு. டாக்கா விசாரணை நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மமூன், 3 வழக்குகளிலும் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்து, ஒவ்வொரு வழக்கிலும் 7 ஆண்டு சிறை என மொத்தம் 21 ஆண்டு தண்டனை விதித்தார். இந்த தண்டனைகள் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு.
அவரது மகன் சஜீப் வாகீத் (அமெரிக்காவில் இருக்கிறார்) மற்றும் மகள் சயிமா வாஜீத் (யூஎன்ணில் அதிகாரி) ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை. மொத்தம் 20-க்கும் மேற்பட்ட பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, வெவ்வேறு சிறை தண்டனைகள் பெற்றுள்ளனர்.

நீதிபதி மமூன் தீர்ப்பில், “ஷேக் ஹசீனாவின் செயல்கள் ஊழல் மனோபாவத்தை காட்டுகிறது. அரசு நிலத்தை தனியார் சொத்தாகக் கருதி, குடும்பத்திற்காக முறைகேடாக ஒதுக்கீடு செய்தார்” என்று கடுமையாக விமர்சித்தார். புர்பச்சல் திட்டத்தில் 30 கதா நிலம் (சுமார் 1 ஏக்கர்) அவரது குடும்பத்துக்கு விதிமீறி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவும் அவரது ஆவாமி லீக் கட்சியும் இந்த வழக்குகளை “அரசியல் பழிவாங்கல்” என்று கண்டித்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவை வெளியேற்ற கோரி வங்கதேசம் இந்தியாவிடம் கடந்த மாதம் கோரியது. இப்போது இந்த தீர்ப்புக்குப் பிறகு அந்த அழுத்தம் அதிகரிக்கலாம். வங்கதேசத்தில் யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு நடக்கிறது. 2026 பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா என்ன செய்வார்? மத்திய அரசு அவரை வெளியெற்றுமா? அல்லது வங்கதேச அரசுக்கு எதிராகுமா என அரசியல் புயலில் சிக்கியுள்ளது!
இதையும் படிங்க: வங்கதேசத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன? ஷேக் ஹசினா தீர்ப்பில் எழும் முக்கிய சந்தேகங்கள்!