சென்னை: மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்றாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் மத சுதந்திரத்தின் எல்லைகள் குறித்த வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இந்த அமர்வில், ஒன்பதாவது நாளான நேற்று விசாரணை நடைபெற்றது. ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்ஷய் நாகராஜன், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25(2)(ஏ)ன் கீழ் மத அமைப்புகளின் உரிமைகளில் அரசு தலையிட முடியாது என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, “ஒரு கோவிலில் தேரோட்டம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக கோவிலைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளையும் மூட முடியாது. சாலையை மூடுவதற்கும் மத சடங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மத விழாவை நடத்தலாம், ஆனால் பொதுச் சாலைகளை மறித்தால் அரசு தலையிடும்” என்று தெளிவாகக் கூறினார்.
இதையும் படிங்க: மத நம்பிக்கையில் தலையிடுறப்போ நீதிமன்றங்கள் நிதானமா இருக்கணும்!! சபரிமலை வழக்கில் பந்தளம் தரப்பு வாதம்!
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா வாதிடும் போது, பாரத வரலாறு, மதப் பிரிவுகள், சம்ஸ்கிருதத்தில் 52 எழுத்துகள் இருப்பது, ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே இருப்பது, ‘சம்விதான்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் சரியான பொருள் இல்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மகாதேவன், “நீங்கள் முக்கிய விவாதத்தை விட்டு திசை திரும்புகிறீர்கள். சம்ஸ்கிருதத்தில் 52 எழுத்துகள் இருக்கலாம், ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. இப்படிப்பட்ட விவாதங்களுக்குள் செல்லாமல், வழக்கின் மையப் பிரச்னைக்கு வருங்கள்” என்று அறிவுறுத்தினார்.

ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, மத வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைவை முறைப்படுத்துவது நிர்வாகத்தின் பகுதி என்றார். நீதிபதி அமானுல்லா குறுக்கிட்டு, “நிர்வாகம் என்றால் அராஜகம் அல்ல. தர்காவோ, கோவிலோ, ஒழுங்கான விதிமுறைகள் இருக்க வேண்டும். மத விதிமுறைகள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
கேரள வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, சபரிமலை வழக்கில் பக்தர்களின் வாதங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி, 2018ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.
இந்த விசாரணையில் நீதிமன்றம் மத உரிமைக்கும் பொது ஒழுங்குக்கும் இடையிலான எல்லையை தெளிவுபடுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கருவை சுமக்க சொல்லி நிர்பந்திக்க முடியாது!! சிறுமியர் கர்ப்பம்!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!