நாடு முழுவதும் தெருநாய்கள் கடித்து வெறிநாய்க்கடி பரவி ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தெருநாய்களை பாதுகாக்க வேண்டும் என்று வாதிடும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அவர், "தெருநாய்களை முழுமையாக பிடித்து அடைத்தால் குப்பைக் கழிவுகளை அகற்றுவதும், குரங்குகளை விரட்டுவதும் கேள்விக்குறியாகி விடும். நாங்கள் தெருநாய்களின் பிரியர்களாகவும், பாதுகாப்பான சுற்றுச்சூழலை விரும்புபவர்களாகவும் இங்கு வந்துள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு!! ராகுல் காந்தி காலை சுற்றும் வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றம் சம்மன்!!
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். "பிற விலங்குகளுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா?" என்று நீதிபதிகள் கேட்டனர்.
மேலும், "சாலைகளில் தெருநாய்கள் இல்லாத சூழலை உறுதி செய்ய வேண்டும். நாய்கள் கடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவை சாலைகளில் அலையும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அருகே நாய்கள் இருப்பதால் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினர்.

தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நொய்டாவைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் தந்தை வாதிட்டார். "தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நொய்டா அதிகாரிகள் தவறிவிட்டனர். குடியிருப்பு நலச் சங்கங்கள் தங்கள் பகுதிகளில் தெருநாய்கள் இல்லாத சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தெருநாய்கள் பிரச்சினை நாடு முழுவதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கேள்விகள் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ஒருபுறம் விலங்குகள் நலம், மறுபுறம் மனித உயிர்கள் பாதுகாப்பு என்ற இரு தரப்பு வாதங்களுக்கு இடையே சமநிலை தேடும் முயற்சியில் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரொம்ப தப்பு...! அன்புமணியிடம் அதிமுக கூட்டணி பேசியது ஏற்புடையது அல்ல... ராமதாஸ் கண்டனம்..!