சென்னை: தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அரசியலமைப்பு விதிப்படி அதிகபட்சம் 35 அமைச்சர்கள் வரை நியமிக்கலாம். தற்போது முதலமைச்சர் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே அமைச்சரவையில் உள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது.
நேற்று முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறை ஆனந்துக்கு, பொதுப்பணித் துறை ஆதவ் அர்ஜுனாவுக்கு, சுகாதாரத் துறை அருண்ராஜுக்கு, நிதித் துறை செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படாது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!

இன்னும் பல முக்கிய துறைகள் ஒதுக்கப்படாமல் உள்ளன. வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்து சமய அறநிலையம், உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை உள்ளிட்ட துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
இந்தத் துறைகள் அடுத்த சில நாட்களில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் என்று த.வெ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூட்டணி கட்சியினருக்கும் சில துறைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் முழுமையடையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை தமிழகத்தின் பல்வேறு துறைகளில் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று த.வெ.க. தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியை பின்பற்றும் விஜய்!! நீலாங்கரை டூ தலைமை செயலகம்! முதல்வர் புதிய முடிவு!