டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமலாக்கத்துறையை நோக்கி சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு:
டாஸ்மார்க் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையினுடைய முடிவில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்ததுறை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் அதிரடி திருப்பம்... அமலாக்கத்துறை தலையில் ஓங்கி கொட்டிய உச்ச நீதிமன்றம்!

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தினுடைய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவானது இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசிஹ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுள் ரோத்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்களது வாதத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை 41 முதல் தகவல் அறிக்கைகளை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் 2025ஆம் ஆண்டு தான் அமலாக்கத்ததுறை உள்ளே வந்ததாகவும், அவர்கள் எடுத்த எடுத்திலேயே சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டனர். மேலும் சோதனையின் பொழுது அனைவருடைய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து ஆவணங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி சரமாரி கேள்வி:
அப்பொழுது கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, தனி நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் டாஸ்மாக் என்ற ஒட்டுமொத்த அமைப்புக்கு எதிராக ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டது என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் அமலாக்கத்துறை அவர்களது அனைத்து வரம்புகளையும் மீறி வருவதாக கண்டித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதாகவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் கோடை விடுமுறை கால அமர்வு தொடங்குகிறது. எனவே கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்த தலைமை நீதிபதி, இதற்கு இடையில், அனைத்து நடவடிக்கைகளும், விசாரணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டார். மேலும் இந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தான் தாங்கள் தடை விதித்து விட்டோமே என்பதை மீண்டும் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசு Vs மத்திய அரசு:
அப்பொழுது தமிழக அரசு தரப்பில் இந்த விவகாரத்தில் அமலாக்கத்ததுறை ஏன் விசாரணை நடத்துகிறது, அவர்களுக்கு இதில் என்ன வேலை என கபில் சிபல் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ராஜு, அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் எந்த தவறுமே செய்யவில்லை என்ற கருத்தை முன்வைத்தார். அதற்கு மறு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, “லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. இதில் அமலாக்கத்துறை ஏன் வரவேண்டும்?” என்ற ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் , “இந்த விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக” தெரிவித்தார். அதற்கு மீண்டும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது, அப்படியானால் மூல வழக்கு எங்கே? என்றும், தனிநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக எப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியும்? என்றும் தலைமை நீதிபதி அமலாக்கத்ததுறைக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் 4 சம்பவம்.. திமுகவிற்கு இடியை இறக்கிய கோர்ட்..!!