போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுனரை நேரில் சந்தித்த தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் பதவியற்பு விழாவிற்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வலியுறுத்துவதால் ஜோசப் விஜய் பதவி ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும் இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான போதிய எம்எல்ஏக்கள் இல்லை. இந்த சூழலில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
நாளை காலை 11:30 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை பதவி ஏற்புக்கு முன்பே ஆளுனர் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போதிய ஆதரவு இல்லாததால் ஆட்சி மைக்க ஆளுனர் அழைப்பு விடுப்பாரா? என்ற கேள்வியும் பதவி ஏற்பு விழா திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!
இதனிடையே பதவியேற்பு விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கை சுத்தப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியைமைக்க உரிமை கோரும் தரப்புக்கு ஆளுநர் அனுமதி வழங்கிய பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தவெக தரப்பில் முறையாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத சூழலில் அந்நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்பதில் உறுதியற்ற நிலை நிலவுகிறது.
இதையும் படிங்க: ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!