அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ், ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியல் பணம், ஊடக செல்வாக்கு, தாக்கம் மற்றும் செல்வாக்கு துறைகள் ஆகிய நான்கு அளவுகோல்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலை போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 450 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் சட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 24வது இடத்தைப் பெற்றுள்ளார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், பட்ஜெட்டை தயாரிப்பதிலும் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார். 2025இல் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நபர் என்ற சாதனையும் அவருக்கு உண்டு.
இதையும் படிங்க: நேட்டோவில் இணையப் போவதில்லை!! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி! முடிவுக்கு வருகிறதா போர்?!

அடுத்ததாக, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 76வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மிகப் பணக்கார பெண் தொழிலதிபர்களில் ஒருவரான இவர், பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகள் ஆவார். பொது பட்டியலிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
கர்நாடகாவைச் சேர்ந்த பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா 83வது இடத்தைப் பிடித்துள்ளார். உயிரி தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக விளங்கும் இவர், நீண்ட காலமாக இந்திய தொழில்துறையில் செல்வாக்கு செலுத்தி வருகிறார்.
இந்தியப் பெண்கள் உலக அளவில் தங்கள் திறமையை நிரூபித்து வருவதற்கு இந்தப் பட்டியல் ஒரு சான்றாக அமைந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: அவரு எங்க இளந்தலைவர் யா... உதயநிதி தலைமையேற்றால் என்ன தவறு? அமைச்சர் ரகுபதி பிரஸ் மீட்...!