அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியால் ஈரான் மீது தொடங்கப்பட்ட போர் 10ஆம் நாளாக தொடர்ந்து வரும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்தாலோசித்து, பரஸ்பர முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளது உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்காசியாவில் தீவிரமடைந்து வரும் இந்த போர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொன்று, ராணுவ தளங்கள், அணு நிலையங்கள், ஏவுகணை தளங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஈரான்-இஸ்ரேல் மோதல் 12 நாட்களில் முடிந்த நிலையில், தற்போதைய போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம், எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அதிர்வுகள் ஆகியவை சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இதையும் படிங்க: 20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

இந்நிலையில், The Times of Israel இடமான தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் பேசியதாவது: "ஈரான் இஸ்ரேலையும் சுற்றியுள்ள நாடுகளையும் அழிக்க பார்க்கிறது. அதை தடுக்க நாங்கள் இணைந்து செயல்பட்டோம். இஸ்ரேலை அழிக்க நினைத்த ஒரு நாட்டை நாங்கள் அழித்துள்ளோம். நானும் நெதன்யாகுவும் இல்லாவிட்டால் இஸ்ரேல் அழிந்திருக்கும்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க நலன்களை கருத்தில் கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக நெதன்யாகுவுடன் பேசி வருகிறேன்" என்று கூறினார்.
டிரம்ப், போரின் முடிவு "மியூச்சுவல்" (பரஸ்பர) முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டாலும், இறுதி முடிவு தன்னிடமே இருக்கும் என்று தெளிவுபடுத்தினார். "நாங்கள் பேசி வருகிறோம். சரியான நேரத்தில் முடிவெடுப்பேன். அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும்" என்று அவர் சொன்னது, நெதன்யாகுவுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதை காட்டுகிறது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட், போர் 4 முதல் 6 வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஈரான் தரப்பில் போர் நீண்டு செல்லும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தலைமையில் IRGC தொடர் எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருகிறது. டிரம்பின் இந்த அறிவிப்பு, போர் விரைவில் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், இஸ்ரேலின் நிலைப்பாட்டைப் பொறுத்தே முடிவு இருக்கும் என்பதால் பதற்றம் தொடர்கிறது. உலக நாடுகள் எண்ணெய் விநியோகம், பொருளாதார தாக்கம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றன.
இந்த போர் மேற்காசியாவின் எதிர்காலத்தை மாற்றும் வகையில் இருப்பதால், டிரம்ப்-நெதன்யாகு ஆலோசனை உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹலோ புடின்!! இந்த போரை என்ன செய்ய?! ரஷ்ய அதிபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு!!