பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் திடீரென ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் கூட்டாளியை நியமிக்கத் தவறியதால் ஆர்வம் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வரி குறைப்பு..! இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம்…!
ஆனால் இந்த முடிவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு அவசரமாக 3 மணி நேரம் மட்டுமே வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு எடுக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிபர் ஷேக் முகமது இந்தியா வந்து சென்ற சில நாட்களிலேயே இந்த பின்வாங்கல் நடந்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகளில் உள்ள 900-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. அவர்களின் அபராதத் தொகையையும் அந்நாட்டு அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த மாற்றங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதை தெளிவாகக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசு இந்த விமான நிலைய திட்டத்தை தனியார் மயமாக்கும் பட்டியலில் சேர்த்துள்ளது. இது பாகிஸ்தானின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் இன்னும் நெருக்கமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த பின்னடைவு பிராந்திய அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கையெழுத்தானது இடைக்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! வரலாறு படைத்தது இந்தியா - ஐரோப்பிய யூனியன்!