மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வந்த டாக்டர் எல். முருகன், தனது அமைச்சர் பதவியையும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழக பாஜகவைத் தயார்படுத்தவும் முழுநேரக் கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள 5 பக்க உருக்கமான கடிதத்தில், தனது அரசியல் பயணம் மற்றும் எளிய குடும்பப் பின்னணியை நினைவுகூர்ந்துள்ளார்.
வணக்கம் பிரதமரே, தங்களின் சமீபத்திய தமிழகப் பயணம் என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் உங்களுக்கு அளித்த அன்பான வரவேற்பும், அவர்களின் முகங்களில் தெரிந்த நம்பிக்கையும் உங்களின் தொலைநோக்குப் பார்வையின் மீது மக்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியது. தமிழகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையும், உங்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அன்பும் எனக்கு மிகுந்த பெருமையையும், தமிழகத்திற்காகவும் நமது கட்சிக்காகவும் தேசத்திற்காகவும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உறுதியையும் அளித்துள்ளது.

நான் எந்தவொரு அரசியல் பாரம்பரியக் குடும்பத்திலிருந்தும் வந்தவன் அல்ல. மிகவும் ஏழ்மையான எளிய குடும்பத்தில் பிறந்தவன். கோனூர் கிராமத்தில் கூலி வேலை மற்றும் கால்நடை மேய்க்கும் வேலை செய்து வந்த எனது பெற்றோர் இப்போதும் எளிய வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். தங்களது மகன் ஒருநாள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவான் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பாரதியார், சர்தார் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கல்லூரி காலத்தில் ஏபிவிபி-யில் இணைந்த நான், கடந்த 30 ஆண்டுகளாக 'முதலில் தேசம், அடுத்தது கட்சி, இறுதியில்தான் சுயநலம்' என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறேன்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!
தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர், இருமுறை மாநிலங்களவை உறுப்பினர், மத்திய இணையமைச்சர் என அடித்தட்டுத் தொண்டனான எனக்கு அளப்பரிய பொறுப்புகளை வழங்கினீர்கள். கடந்த 5 ஆண்டுகளாக உங்களது அமைச்சரவையில் பணியாற்றியதன் மூலம் தங்களின் அர்ப்பணிப்பையும் கருணையையும் மிக அருகிலிருந்து பார்த்துள்ளேன். திருக்குறளை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்றது, நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது, காசி மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் எனத் தமிழ்ப் பண்பாட்டிற்கு நீங்கள் அளித்த கௌரவங்கள் தமிழக மக்களுக்கு அளப்பரிய பெருமை சேர்த்துள்ளன.
கட்சியும் நீங்களும் எனக்கு அளித்த அனைத்துப் பொறுப்புகளும் எனது கடமை உணர்வை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. எனவே, மிகவும் பணிவுடனும் நன்றியுடனும் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவெனில், என்னை மத்திய இணையமைச்சர் பொறுப்பிலிருந்தும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை முழுமையாக வலுப்படுத்தும் முழுநேரக் களப்பணியில் என்னால் முழு மூச்சாக ஈடுபட முடியும்.
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு தெருவிற்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்கவும், கட்சித் தொண்டர்களுடன் தோளோடு தோள் நின்று மாநிலம் முழுவதும் பாஜகவின் இருப்பை விரிவாக்கவும் விரும்புகிறேன். தங்களின் அனைவருடன், அனைவரின் வளர்ச்சிக்காக என்ற செய்தியை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கட்சியை முழுமையாகத் தயார்படுத்த எனது முழு நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்..! பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!