உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தாராலி பகுதியில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழையும், திடீர் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் கேரளாவைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்ற கேரள குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் உத்தரகாசி செல்வதாக புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அவர்களை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உறவினர் ஒருவர் கூறியுள்ளார். ஹரித்வாரைச் சேர்ந்த டிராவல் ஏஜென்சி வாயிலாக அவர்கள் பயணித்ததாகவும், டிராவல் ஏஜென்சியாலும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேரள சுற்றுலாப் பயணிகளின் கதி என்ன என்று தெரியாததால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாராலி கிராமத்தில் கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 12 முதல் 17 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 8 முதல் 10 ராணுவ வீரர்களும் காணாமல் போயுள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரகாண்டை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 4 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்..!!
மீட்புப் பணிகள் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) ஆகியவற்றால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மோசமான வானிலை மற்றும் தொடர் மழை மீட்புப் பணிகளை சவாலாக்கியுள்ளது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் ஆர்யா, தொலைதொடர்பு வசதிகள் மோசமாக இருப்பதால் தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார். இந்த பேரிடர் காரணமாக ஹரித்வார், நைனிடால் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேக வெடிப்பு மலைப்பகுதிகளில் அருவி போன்று மழைநீர் கொட்டுவதால் ஏற்படும் பேரழிவை உருவாக்குகிறது. இதற்கு முன் 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கேதார்நாத் யாத்திரையில் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள்..!