தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது அல்லது வேண்டுமென்றே பாடுவதைத் தடுப்பது போன்ற செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், தேசிய உணர்வின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அண்மையில், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் நிறைவிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மேலும், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளிலும் இந்தப் பாடல் இசைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா மற்றும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் தொடக்கத்திலும் நிறைவிலும் இசைக்கப்பட்டது. இருப்பினும், இந்த நடைமுறைக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதையும் படிங்க: மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

இந்த சூழலில், தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மசோதாவுக்கு ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறி சட்டமாக அமலுக்கு வந்தால், அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை வேண்டுமென்றே தடுக்க முயற்சிப்பவர்கள் அல்லது பாடல் ஒலிக்கும்போது இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த மசோதா குறித்து ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக விவாதிக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!