மலேசியா கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜலில் தேசிய மைதானத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் இன்று மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 85,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டுள்ள இந்த விழாவில், அரசியல் சார்ந்த முழக்கங்களோ, கொடிகளோ அல்லது அரசியல் அடையாளங்களோ பயன்படுத்தக் கூடாது என மலேசியக் காவல்துறை ஏற்கனவே மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்தத் தடையையும் மீறி, அரங்கிற்குள் இருந்த ரசிகர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொடியைத் கையில் ஏந்தித் தூக்கிப் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் வைரலானது. இதனைக் கவனித்த மலேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர், உடனடியாக அந்த ரசிகரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட இடத்தில், அரசியல் சட்டங்களை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ‘TVK.. TVK..’ என ரசிகர்கள் முழக்கமிட்ட போது, விஜய் அவர்கள் தனது கைகளை அசைத்து ரசிகர்களை அமைதிப்படுத்திய போதிலும், உற்சாக மிகுதியில் சில ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மைதானம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி மேடைப் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், இந்தக் கைதுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் பரபரப்பு: குப்பை அகற்றக் கோரி போராட்டம்: அண்ணாமலை கைது!!
இதையும் படிங்க: அஜித் கொலை வழக்கு: முன்ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதில்; டிஎஸ்பி சண்முகசுந்தரம் விரைவில் கைது?