நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாகப் போர்க் காலங்களில் இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்பப்படும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்கப்படும். மேலும் போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

அதேபோல இரவில் மின்சாரத்தை துண்டித்து வெளியே தெரியாத வகையில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிற்பபு பயிற்சி வழங்கப்படும். எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, பதுங்குக் குழிகள், சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்தும் மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.. ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் மக்கள் மறுப்பு.. மக்களை உசுப்பிவிடும் மதகுரு!!

ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதாள பதுங்கு அறைகளை ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி வைத்துள்ளனர். பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியை ஒட்டிய கிராமங்களில் போர்கால ஒத்திகை நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது. வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதை எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றினர்.
கடந்த 1971ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகள் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: எனது அலுவலகத்தையே தரேன்; போர் வேண்டாம்... ஐநா பொதுச்செயலாளர் அட்வைஸ்!!